காவலர் தினம் டிசம்பர் 24

காவலர்களை “கொண்டாடுவதற்கு ஒரு தினம்” அதுவே காவலர் தினம்

அன்னையர் தினம், காதலர் தினம், குழந்தைகள் தினம், கல்லூரி தினம், பஸ் டே, ஆசிரியர் தினம், தந்தையர் தினம் என்று இப்படி பல தினங்களை மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றார்கள். இதில் காதலர் தினம், ஒரு பெண் ஒரு ஆண் அவர்களின் சுயநலத்திற்காக காதலிப்பார்கள். அதற்கு ஒருநாள் குறிப்பிட்டு அதை காதலர் தினம் என்று கொண்டாடுகின்றனர்.

இந்தியாவின் அனைத்து மூலைமுடுக்குகளிலும் உள்ள காவல்துறை அதிகாரிகள் ஒவ்வொரு நாளும், தங்கள் சீருடையை அணிந்து, பேட்ஜ்-ஐ பொருத்தி, தாங்கள் ஏற்ற உறுதிமொழியின்படி மக்களை பாதுகாக்கவும் மற்றும் அவர்களுக்கு சேவையாற்றவும், பணியாற்றுகின்றனர். வீரதீர செயல்களையோ அல்லது சாகசங்களையோ நிகழ்த்துவது குறித்து சிந்திக்காமல் ஒவ்வொரு நாள் காலையிலும் தங்கள் இல்லத்திலிருந்து அவர்கள் பணியாற்றப் புறப்படுகின்றனர். அவர்களது கடமைப் பொறுப்புகளை நிறைவேற்றுவதுமீது மட்டுமே அவர்களது முழு கவனமும் இருக்கிறது. தங்கள் பணியாற்றும் பகுதிகளை பாதுகாப்பாக பராமரிப்பது மீதும் மற்றும் சக அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது மீதும் அவர்கள் தங்களது அர்ப்பணிப்புடன்கூடிய கவனத்தையும் செலுத்துகின்றனர். தீங்கிலிருந்தும், ஆபத்திலிருந்தும் மக்களை பாதுகாக்கின்ற, சவால் நிறைந்த, ஆனால் அதே வேளையில் இன்றியமையா கடமை பணியை நிறைவேற்ற அவர்கள் ஆரவாரமில்லாமல், அமைதியாகவும் தைரியத்தோடும் செயலாற்றுகின்றனர்.

இத்தகைய அரும்பணி ஆற்றுபவர்களுக்கு நமது மதிப்பையும் மரியாதையையும் வெளிப்படுத்துவதுதானே நாம் செய்கின்ற சரியான பதில்வினையாக இருக்கமுடியும்! ஏனென்றால், இருளும், ஆபத்தும், வன்முறையும் அமைதியை சீர்குலைக்க முற்படுகையில் நமது உயிர்களை பாதுகாப்பதற்காக தங்களது உயிரையே தியாகம் செய்ய தயாராக, அச்சமின்றி களத்தில் இறங்குபவர்கள் நமது காவல்துறை பணியாளர்களே.

பண்டிகை போன்ற விஷேசமான நாட்களில் நாமெல்லாம் நம் வீட்டில் சமைத்து அறுசுவை உணவை குடும்பத்துடன் அமர்ந்து ரசித்து, ருசித்து சாப்பிட்டு கொண்டிருக்கும் வேளையில் நமது காவலர்கள் பந்தோபஸ்து என்ற பெயரில் எங்கோ ஒரிடத்தில் கொளுத்தும் வெயிலிலும், மழையிலும் பாதுகாப்பு கருதி பணியில் இருப்பார்கள். இவர்களுக்கு நேரத்திற்கு சரியாக சாப்பிடக்கூட உணவு கிடைப்பதில்லை. சாதாரண நாட்களில் காவல் நிலையத்திற்கு வரும் புகார்களின் மீது விசாரணை நடத்தும் போதும் இரு புகார்களின் தாரர்களுக்கும் சிபாரிசாக மேலதிகாரிகள், அரசியல்வாதிகள், ஆளும் கட்சியினர், எதிர் கட்சியினர், ஜாதி கட்சியினர் என்று அதிக அளவில் சிபாரிசு பிரஷர் இருக்கும். இந்த சூழ்நிலையில் காவல் ஆய்வாளர்கள், அதிகாரிகள், காவலர்களின் மனநிலை எந்தளவிற்கு பாதிக்கும் என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இதற்கு உதாரணமாக.. சமீபத்தில் மரணமடைந்த காவல் ஆய்வாளர்கள் பலர் உள்ளார்கள். நாம் சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இப்படி பொதுமக்களுக்காகவும், நாட்டுக்காகவும் கஷ்டப்படும் காவலர்களுக்காக மற்றும் நாட்டுகாக தன்னுயிர் தந்த காவலர்களுக்காகவும் 1959 – அக்டோபர் 21 ஆம் தேதி முதல் ஆண்டுதோறும் அனைத்து மாநிலங்களிலும்; தியாக நாளாக மட்டும் கடைபிடிக்கப்படுகின்றது. இந்த தியாக நாளை (அக்டோபர் 21) நாம் கொண்டாட முடியாது.

காவலர்களின் உழைப்பையும், அவர்களுடைய சாதனைகளை நினைவு கூறும் வகையில் 24-12-2014 அன்று காவலர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், சந்தோஷப்படுத்தும் விதமாகவும் வருடத்தில் ஒருமுறையாவது நாடு முழுவதும் பொதுமக்களால் கொண்டாடி காவலர்களுக்கு பொதுமக்கள் சார்பாக பூங்கொத்து மற்றும் இனிப்புடன் நினைவு பரிசுகளையும் வழங்கி அவர்களை ஊக்குவித்து கௌரவித்தால் அவர்களின் மனநிலை மற்றும் அவர் குடும்பத்தினர் மனநிலை எப்படி இருக்கும் என நினைத்துப் பாருங்கள்.

நமக்காக 24 மணிநேரமும் இடைவிடாமல் பொதுமக்களுக்காக பாதுகாப்பு அளித்து வருகின்றார்கள். ஆதலால் 24ஆம் தேதியை தேர்ந்தெடுத்துள்ளோம் மற்றும் வருடத்தின் 12 மாதங்களும் தங்களின் பாதுகாப்பு சேவையை நாட்டுக்கு அளிக்கின்றனர். ஆதலால்; 12வது மாதத்தினை தேர்ந்தெடுத்துள்ளோம். 2014 இதன் கூட்டு தொகை (2+0+1+4=7) ஏழு. இதுவும் வாரத்தின் ஏழு நாள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர் என்பதை குறிக்கின்றது. எனவே காவலர்களுக்காக 24-12-2014 ஆம் தேதி காவலர் தினத்திற்கு உகந்த நாளாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
“காவலர்கள் தினம்” 24-12-2014 அன்று முதல் அனுசரிக்கப்பட்டு ஆண்டு தோறும் இத்தினம் காவலர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

பொதுமக்களுக்காக அவர்கள் படும் இந்த துன்பங்களை பொதுமக்களாகிய நாம் அவர்களை ஊக்கப்படுத்தி கௌரவிக்கும் அந்த ஒரு காவலர் தினம் இன்ப தினமாக மாறும்.
காவலர் தினம் கொண்டாடுபவர்கள் பொதுமக்களாக இருக்க வேண்டும்.

நமது இந்தியத் திருநாட்டில் எந்த ஊராக இருந்தாலும் நான்கு சாலைகள் சேர்ந்தால் ஏதாவது ஒரு நகர் என்று பெயர் வைத்திருப்பார்கள். அந்த நகரில் உள்ள குடியிருப்போர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குடியிருப்போர் நலச்சங்கம் என பெயரிட்டு அந்த நகரில் உள்ள குறைகளை, தேவைகளை தகுந்த அலுவலர்களிடம் மனு கொடுத்து நகரின் பிரச்சனைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள்.

இந்த குறைகளை தீர்த்துக் கொள்ள உறுதுணையாக அந்நகர எல்லைக்குட்பட்ட காவல் நிலையம் முக்கிய பங்கு வகிக்கும். இப்படியாக எல்லா வகையிலும் அந்தந்த நகர்களில் உள்ள பொதுமக்களைத் தவிர வேறு யாராலும் காவலர் தினம் என்று அந்த நாளை சிறப்பாக கொண்டாட முடியாது.

ஆகையால் இந்த ஒரு நல்ல விஷயத்தை நாம் ஏன் முதன் முதலில் தமிழ்நாட்டில் இருந்து தொடங்கக் கூடாது. எங்கும் தமிழன் எதிலும் தமிழன் என்று இருக்கும்போது காவலர் தினம் கொண்டாடுவதிலும் தமிழன் முதல்வனாகத் திகழட்டுமே.

ஒரு காவல் நிலையத்திற்குட்பட்ட நகர்களில் வசிக்கும் அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து அந்தந்த குடியிருப்பு சங்கங்கள் மூலமாக அவர்களின் பகுதி காவல் நிலையத்தை அழகுபடுத்தி காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்களுக்கும் இனிப்புடன் நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டு விழா நடத்தினால் நமக்காகவும் நாட்டுக்காகவும் அவர்கள் செய்யும் சேவைக்கு ஒரு சிறிய நன்றியைத் தெரிவித்தது போல் இருக்குமல்லவா?

அன்பார்ந்த பொதுமக்களே.. இதனை படித்து காவலர்களுக்கு எதற்கு காவலர்தினம் விழா எடுக்க வேண்டும். அவர்களின் கடமையைத்தான் செய்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். உயிர் உள்ள அனைவருக்கும் அந்தந்த காலக்கட்டத்திற்கு ஏற்ப கடமைகள் உண்டு. ஆனால் காவலர்களின் கடமை முற்றிலும் வித்தியாசமானது. உயிரை பணயம் வைத்து சரியான உணவு, உறக்கம் இல்லாமல் ஆற்றும் கடமை முற்றிலும் வித்தியாசமானது.

சினிமா படங்களில் காவலர்களை தவறாக சித்தரித்துக் காட்டினால் அதனைப் பார்த்து கை தட்டும் நம்மில் பல பேர் ஏன் இவர்களுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தி; அந்த விழா மேடையில் காவலர்களை கௌரவிக்கும்போது நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இன்னும் பலமாக கைத்தட்டலாமே..!

நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா (Newsmedia Assocation of India), பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் (Friends of Police Monthly Magazine) மாத இதழ் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் (Police News Plus)தின மின்னிதழின் சார்பாக இந்த இனிய நாளில் 24.12.2019 அன்று நம் அன்பை காவலர்களுக்கு செலுத்துமாறு கேட்டு கொள்கின்றோம்.

வாழ்க காவல்துறை ! வளர்க காவலர்கள் !

அ.சார்லஸ்
காவலர் தினம் – நிறுவனர்
ஆசிரியர் – போலீஸ் நியூஸ் பிளஸ்
தேசிய தலைவர் – நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா